பைஞ்சாய் (பசுமையான கோரை) சூழ்ந்திருந்த பகுதியாதலால் 'சாய்க்காடு' என்று அழைக்கப்பட்டது. 'சாயாவனம்' என்றும் அழைக்கப்படுகிறது. காசிக்கு சமமாகச் சொல்லப்படும் ஆறு தலங்களுள் இத்தலமும் ஒன்று. கோயிலையொட்டித் தேர்போன்ற விமானமொன்று சக்கரத்துடன் உள்ளது. இந்திரன் இக்கோயிலை விண்ணுலகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதாகவும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
மூலவர் 'சாயாவனேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், பெரிய சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'குழலினும் நன்மொழியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
இயற்பகை நாயனார் முக்தி பெற்றத் தலம். இயற்பகை நாயனார், அவரது மனைவி ஆகியோரது உற்சவ விக்கிரகங்கள் உள்ளன.
இக்கோயிலில் வில்லுடன் கூடிய மிகப்பெரிய முருகன் உற்சவ விக்கிரகம் உள்ளது. இச்சிலை பல வருடங்களுக்கு முன் கடலில் மீனவர்கள் மீன்பிடி வலையில் மாட்டியதாகவும் அதை இத்தலத்திற்குக் கொண்டு வந்து வைத்து பூஜை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இயற்பகை நாயனார் வாழ்ந்த தலத்தில் இவ்வாறு நடைபெற்றது மிகவும் பொருத்தமே!.
இந்திரன், ஐராவதம், உபமன்யு முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.
இக்கோயிலுக்கு அருகில் 'பல்லவனீஸ்வரம்' என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது. இரண்டு கோயிலுக்கும் இடையே உள்ள தூரம் 1/2 கி.மீ. மட்டுமே.
திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 12 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
|